Books

நூற்றுக்கு நூறு

புத்தக அறிமுகம்

:

நூற்றுக்கு நூறு

முதற்பதிப்பு

:

டிசம்பர் 2019

விலை

:

Rs.145 /-

வெளியீடு

:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

மொத்த பக்கங்கள்

:

149                               

சமர்ப்பணம்

 

போட்டித் தேர்வில் மட்டுமல்லாது வாழ்க்கைத் தேர்விலும் வெற்றிப் பெறவிரும்பும் அனைவருக்கும்

                          

*******

       போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பல புத்தகங்களை எழுதிய ஆசிரியர், மாணவர்கள் தேர்வுத் தாளில் நூற்றுக்கு நூறு எடுப்பதைக் காட்டிலும் வாழ்க்கைத் தேர்வில் சதமடிப்பது முக்கியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு உணர்வுசார் நுண்ணறிவைப் பற்றி பற்பல எடுத்துக்காட்டுகளுடன் அற்புதமாக படைத்தளித்துள்ளார்.

       படிப்பு மட்டுமே வாழ்வில் வெற்றி தேடித் தருவதில்லை, மனிதர்கள் தங்கள் நுண்ணறிவை கையாள தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை எளிதாக எடுத்தியம்புகிறது நூற்றுக்கு நூறு.

       “இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்” என்ற திரைப்படப் பாடலோடு டேனியல் காஹ்னிமேன் குறிப்பிட்டுள்ள அனுபவிக்கிற மனசு (Experiencing self) நினைவு மனசு (Remembering Self), உச்ச மற்றும் முடிவு விதி (Peak End Rule) போன்றவைகள் பற்றி படிப்பவர்கள் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் பாடகர்களை வைத்தும் தாயின் பிரசவ வலியை தொடர்ந்து தாய்மையில் வரும் சந்தோசத்தைப் பற்றியும் மிக அழகாக விளக்கியுள்ளார்.

       சாக்லேட் கேட்டு அழும் சின்ன குழந்தையை சமாதானப்படுத்தும் சிறிய நிகழ்வுகளோடு சேர்த்து உணர்வு சார் நுண்ணறிவையும் (Artificial Intelligence), உறுதிசார்பையும் (Confirmatory Bias) உணரவைத்திருக்கிறார் ஆசிரியர்.

       என்னிடத்தில் பொய் சொல்லிப்பார் என்று சவால் விடும் பால் எக்மேன், நான்கு குணங்களை கொண்ட டேனியல் கோல்மேனின் உணர்வுசார் நுண்ணறிவு, டேனியல் காஹ்னிமேனின் சிஸ்டம் 1, சிஸ்டம் 2 திங்கிங், ஆல்வின் டாஃப்ளரின் எதிர்கால அதிர்ச்சி, யுவல் நோவோ ஹாரரியின் 21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள், கலீல் ஜிப்ரானின் “குழந்தைகள் என்னும் அம்பை விடும் வில் தான் பெற்றோர்கள்” என எக்கச்சக்க தகவல்கள்.

       அமிக்டெலா - உணர்வு மூளை, நியோகார்டெக்ஸ் - அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் அறிவு மூளை, உணர்வைத் தூண்டும் பொருட்களின் புள்ளி விவரங்களைத் தரும் ஹிப்போகேம்பஸ், எதிர்காலத்தை துல்லியமாக கணித்து சொல்லும் ஜீன் ஜோதிடம், புலிமியா… அனைத்தையும் தெரிந்துகொள்ள வாருங்கள் படிக்கலாம்.

       ஒரு அழகான குடும்பத்தில் அன்றாடம்  நிகழும் அன்பான உரையாடல்களோடு ஒருங்கிணைத்து உணர்வுசார் நுண்ணறிவைப் பற்றி இனிமையாய் புரிய வைத்திருக்கிறார் ஆசிரியர்.

       மனிதர்கள் தங்கள் உணர்ச்சிகளை நுண்ணறிவாக கையாளத்தெரிந்துக்கொண்டு தேர்வு வாழ்க்கையிலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றிபெற  “நூற்றுக்கு நூறு” நூறு சதம் பயனளிக்கும்.